திண்டிவனத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது குறித்த ஆய்வுக்கூட்டம்

திண்டிவனத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது குறித்த ஆய்வுக்கூட்டம் சப்-கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடந்தது.

Update: 2019-02-12 22:00 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சப்-கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், தாசில்தார் பிரபு வெங்கடேஸ்வரன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் நாகராஜன், திண்டிவனம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி கணக்காளர் அண்ணாமலை, போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேம்பென்னட் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், நடைபாதை வியாபாரிகள், பஸ் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சப்-கலெக்டர் மெர்சி ரம்யா பேசியதாவது-

திண்டிவனம் நகரில் நேருவீதி, திண்டிவனம்-செஞ்சி பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதி சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த நடைபாதை கடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் மூலம் அகற்றப்பட்டன. மேலும் நடைபாதை வியாபாரிகளுக்கு சந்தைமேடு, காமாட்சியம்மன் கோவில், வண்டிமேடு ஆகிய பகுதிகளில் கடைகள் நடத்த மாற்று இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் வியாபாரிகள் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட இடங்களுக்கு செல்லாமல் அதே இடங்களை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக மீண்டும் கடைகளை நடத்தி வருகிறார்கள். ஆகவே வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) வரை திண்டிவனம் நகரில் உள்ள சாலையோர நடைபாதை கடைகளை வியாபாரிகள் தாமாக முன்வந்து அகற்றிக் கொள்ள ஏதுவாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்குள் வியாபாரிகள் தங்களது கடைகளை அகற்றுவதோடு, மாற்று இடங்களில் கடைகள் நடத்த முன்வர வேண்டும். இல்லையென்றால், நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும். மேலும் வியாபாரிகள் நலன்கருதி சந்தைமேடு பகுதியில் புதிய பேருந்து நிறுத்தம் அமைப்பதோடு, திண்டிவனத்தில் இருந்து செஞ்சி, வந்தவாசி மார்க்கமாக செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து சப்-கலெக்டர் மெர்சி ரம்யா, அரசு அதிகாரிகளுடன் பஸ் நிறுத்தம் அமைய உள்ள சந்தைமேடு பகுதியை பார்வையிட்டதோடு, அங்குள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளையும் அகற்றுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்