பிரதமர் மோடி 16-ந் தேதி மராட்டியம் வருகை வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

16-ந் தேதி மராட்டியம் வரும் பிரதமர் நரேந்திர மோடி துலே மற்றும் யவத்மாலில் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Update: 2019-02-12 23:45 GMT
மும்பை, 

16-ந் தேதி மராட்டியம் வரும் பிரதமர் நரேந்திர மோடி துலே மற்றும் யவத்மாலில் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் சுற்றுப்பயணமாக வருகிற 16-ந் தேதி மராட்டியம் வருகிறார். வட மராட்டியத்தில் உள்ள துலே மற்றும் மத்திய பிரதேசத்தின் இந்தூரை இணைக்கும் வகையில் மாலேகாவில் இருந்து துலே வழியாக இந்தூருக்கு ரெயில்வே வழித்தடம் அமைக்கப்பட இருக்கிறது.

இந்த ரெயில்வே திட்டத்துக்கு பிரதமர் மோடி துலேயில் அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் துலே, சிர்பூர், சிந்த்கெடா ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2,400 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ள சுல்வாடே- ஜாம்பால் நீர்ப்பாசன திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

பா.ஜனதா பொதுக்கூட்டம்

இதுதவிர துலேயில் கட்டப்பட்டு உள்ள புற்றுநோய் சிகிச்சை ஆஸ்பத்திரியையும் திறந்து வைக்கிறார். பின்னர் யவத்மால் செல்லும் பிரதமர் மோடி மாநில அரசின் உமேத் திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்குகிறார். தொடர்ந்து, பந்தர்வாடாவில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிரதமர் வருகையால் துலே, யவத்மால் மட்டுமின்றி அதன் பக்கத்து மாவட்டங்களான நாசிக், நந்தூர்பர், ஜல்காவ் மாவட்ட பா.ஜனதாவினரும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்