ரபேல் பேரத்தில்திட்டமிட்டு கொள்ளை பிரதமர் மோடி மீது தேசியவாத காங்கிரஸ் தாக்கு

ரபேல் பேரத்தில் நாட்டின் பணத்தை பிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டு கொள்ளை அடித்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2019-02-12 23:00 GMT
மும்பை, 

ரபேல் பேரத்தில் நாட்டின் பணத்தை பிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டு கொள்ளை அடித்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஊழல் நடந்திருப்பது...

பிரான்சில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று நிருபர்களை சந்தித்த தேசியவாதகாங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் பத்திரிகை ஒன்றில் வெளியான இ-மெயிலை சுட்டிக்காட்டி ஊழல் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

திட்டமிட்ட கொள்ளை

ஏர்பஸ் நிறுவனத்தின் அதிகாரிகள், பிரான்சு அதிகாரிகளுக்கு அனுப்பிய இ-மெயில் தகவல்கள் மூலம் பிரதமர் மோடி 2015-ம் ஆண்டு ரபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கு முன்பு அனில் அம்பானி அந்நாட்டின் ராணுவ மந்திரியை சந்தித்தது தெரியவந்துள்ளது.

இதன்மூலம் ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டுடன் பிரதமர் நரேந்திர மோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்போவதை அனில் அம்பானி முன்கூட்டியே அறிந்து வைத்துள்ளார். பிரதமர் மோடி முன்னின்று அனைத்தையும் அரங்கேற்றியுள்ளார். அனில் அம்பானி அவர் சார்பாக ஒப்பந்தத்தை முடிக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் என்பது இந்த இ-மெயில் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டின் பணம் திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்