கடலூரில் கடல் சீற்றம் எதிரொலி, மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பினர்

கடல் சீற்றம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினர்.

Update: 2019-02-13 22:30 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசை படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று அதிகாலையில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக விசை மற்றும் பைபர் படகுகளில் சென்றனர். ஆனால் வழக்கத்தை விட கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினர். 4 அல்லது 5 நாட்கள் கடலில் தங்கி மீன்பிடிக்கும் ஒரு சில மீனவர்கள் மட்டும் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கின்றனர்.

மீனவர்கள் தங்களின் படகுகளை கரையோரமாக நிறுத்தி வைத்திருந்தனர். கடலூர் துறைமுகத்துக்கு சுமாராக நாள் ஒன்றுக்கு 100 டன் அளவுக்கு மீன்கள் வரத்து இருக்கும். இவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.

ஆனால் நேற்று கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாததால் மீன் வரத்து இன்றி கடலூர் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மீன்களை வாங்கி செல்வதற்காக வந்த உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். உள்ளூர் மார்க்கெட்டுகளுக்கும் மீன் வரத்து குறைந்து காணப்பட்டது.

மேலும் செய்திகள்