ஸ்ரீமுஷ்ணம் அருகே, அம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளை

ஸ்ரீமுஷ்ணம் அருகே அம்மன் கோவிலில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-02-13 22:45 GMT
ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் அருகே அம்புஜவல்லிப்பேட்டை கிராமத்தில் காலனி தெருவில் அம்புஜவல்லி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல் பூசாரி காமராஜ் கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் கோவில் கதவை திறக்க வந்தார். அப்போது கோவிலில் 3 கதவுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியும், பீரோவில் வைத்திருந்த பணத்தையும் காணவில்லை.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் நள்ளிரவில் மர்மநபர்கள் கோவில் கதவுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அம்மன் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தாலி சங்கிலி, கோவில் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக நன்கொடையாக வசூலிக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். மேலும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தையும் திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது. கொள்ளை போன நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்