வலங்கைமான் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

வலங்கைமான் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-02-13 23:00 GMT
வலங்கைமான்,

வலங்கைமான் அருகே உள்ள இனாம்கிளியூர் கிராமம் வலங்கைமான்-பாபநாசம் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. இதில் கோவிந்தகுடி முதல் இனாம்கிளியூர் வரையிலான 2 கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்திட நெடுஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் கடந்த 4 மாதங்களாக ஆமை வேகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாலை பணிகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் சாலையை உடனே சீரமைக்கக்கோரியும், பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கக்கோரியும் நேற்று இனாம் கிளியூர் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் சாலையின் குறுக்கே டிராக்டர், வேன், ஆட்டோ ஆகியவற்றை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ரவி, ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் வலங்கைமான்-பாபநாசம் சாலையில் 2 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்