நாகூர் அருகே ஜவுளிக்கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் வாலிபர் கைது

நாகூர் அருகே ஜவுளிக்கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-13 23:00 GMT
நாகூர்,

நாகையை அடுத்த நாகூர் காதர்ஷா மரைக்காயர் தெருவை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 40). இவர் சென்னையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரஹீமிற்கு வாடகைக்கு கொடுத்து இருந்த தனது மோட்டார் சைக்கிளை திருப்பி கேட்டார். அதற்கு அவர் மோட்டார் சைக்கிளை முஸ்தாக் என்பவரிடம் ரூ.25 ஆயிரத்திற்கு அடமானம் வைத்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து முகமது உசேன் தனது மோட்டார் சைக்கிளை முஸ்தாக்கிடம் இருந்து மீட்டு, தன்னிடம் வேலை பார்க்கும் பிரவீன்குமாரிடம் (20) கொடுத்தார். இந்த நிலையில் முஸ்தாக், ஹமீம் ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளை கேட்டு பிரவீன்குமாரை தாக்கினர்.

மேலும் நாகூர் தர்கா அலங்கார வாசல் அருகே முகமது உசேன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முஸ்தாக், ஹமீம் உள்ளிட்ட சிலர் காரை வழிமறித்து முகமது உசேனை இரும்பு கம்பியால் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவரது கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்து முகமது உசேன் கொடுத்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்தாக், ஹமீம் உள்பட 9 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நாகூர் மியான் தெருவை சேர்ந்த முகமது ரபீக் மகன் முகமது நியாஸ் (21) என்பவர் நேற்றுமுன்தினம் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் போலீசார் அவரை கைது செய்து, நாகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து நாகூர் போலீசார் அவரை கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்