மாவட்டத்தில் 1.55 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு அதிகாரி தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.55 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்தார்.

Update: 2019-02-13 22:45 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கான தொழில் திறன் பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை தாங்கி பயிலரங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கு திறன் பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விருப்பமுள்ளவர்கள் பயிற்சியில் சேருவதற்காகவும் இந்த முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதிகளிலும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவர்களுக்காக நடத்தப்படும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 933 பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர். அதில் ஆண்கள் 76 ஆயிரத்து 781 பேரும், பெண்கள் 79 ஆயிரத்து 152 பேரும் பதிவு செய்து காத்திருக்கின்றனர். தொடர்ந்து பதிவை புதுப்பித்து 5 ஆண்டுகளை கடந்த பதிவுதாரர்களின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு உட்பட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி தொகை பெற தகுதியானவர்கள்.

ஆதிதிராவிடர்களை பொறுத்தவரை 45 வயதும், ஏனையோர் 40 வயதும் மிகாமல் இருக்க வேண்டும். தற்போது 1500-க்கும் அதிகமான பதிவுதாரர்கள் இந்த உதவித்தொகையை பெற்று வருகின்றனர். இவர்களில் 416 பதிவுதாரர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ராமமூர்த்தி பங்கேற்று, சுயவேலைவாய்ப்பு குறித்தும், ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அலுவலர் பன்னீர்செல்வம் திறன் பயிற்சி அவசியம் குறித்தும் பேசினார். இதில் 6 திறன் பயிற்சி நிறுவனங்களும், 156 வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெறும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்