தஞ்சையில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கஜா புயல் நிவாரணம் வழங்க கோரிக்கை

கஜா புயலால் சேதம் அடைந்த கோழி பண்ணைகளுக்கு நிவாரணம் வழங்க கோரி தஞ்சையில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2019-02-13 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நல சங்கத்தினர் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மண்டல தலைவர் பூபாலன் தலைமை தாங்கினார்.

கஜா புயலால் சேதம் அடைந்த கோழி பண்ணைகளுக்கு உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்தும், உடனே நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிவசேனா கட்சி மாநில துணைத் தலைவர் புலவஞ்சி போஸ், சங்க நிர்வாகி அண்ணாதுரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 210 கோழி பண்ணைகள் சேதம் அடைந்தன. இந்த கோழி பண்ணைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி அந்தந்த மாவட்ட கலெக்டர்களை நேரில் சந்தித்து மனு அளித்தோம். ஆனால் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.

கடந்த 2011-ம் ஆண்டு வீசிய தானே புயலின்போது விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் சேதம் அடைந்த 1,200 கோழி பண்ணைகளுக்கு தமிழகஅரசு நிவாரணம் வழங்கியது. அதேபோல கஜா புயலால் சேதம் அடைந்த கோழி பண்ணைகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இன்னும் 10 நாட்களுக்குள் நிவாரணம் வழங்கவில்லை என்றால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்