புயல் நிவாரணம் வழங்க கோரி சமையல் செய்து காத்திருப்பு போராட்டம்

குருவிக்கரம்பையில் புயல் நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-13 22:45 GMT
சேதுபாவாசத்திரம்,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயல் காரணமாக ஏராளமான குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், மாடி வீடுகள் சேதமடைந்தன. இதைப்போல தென்னை, வாழை, கரும்பு, மற்றும் நெற்பயிர்கள், கடற்கரையோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தன.

கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புயல் தாக்கி 3 மாதங்களை நெருங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் நிவாரணம் முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பையில் புயலால் பாதிக்கப்பட்ட குருவிக்கரம்பை, பாலச்சேரிக்காடு, கங்காதரபுரம், மருங்கப்பள்ளம், முனுமாக்காடு, நாடாகாடு, வாத்தலைக்காடு, நாடியம், கரம்பக்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200 பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததால், பாத்திரங்களை கொண்டு வந்து அடுப்பு மூட்டி, அங்கேயே சமைத்து போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தங்களுக்கு புயல் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகையை விரைந்து வழங்கக் கோரி கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.வேலுச்சாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட பிரதிநிதி பழனிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.சின்னப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சம்பவஇடத்துக்கு வந்த பேராவூரணி மண்டல துணை தாசில்தார் யுவராஜ், குருவிக்கரம்பை சரக வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் மருதுதுரை மற்றும் இன்ஸ்பெக்டர் பரமானந்தம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் ஒரு வாரத்துக்குள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் நிவாரணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிவித்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்