சட்டத்தை எதிர்ப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் ஹெல்மெட் அணிய கால அவகாசம் கொடுக்க முடியாது கவர்னர் கிரண்பெடி பேட்டி

சட்டத்தை எதிர்ப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். ஹெல்மெட் அணிய இனிமேல் கால அவகாசம் கொடுக்க முடியாது என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

Update: 2019-02-13 22:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி ஒவ்வொரு அரசு துறைக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அண்ணாநகரில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் 2–வது மாடியில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கிராமபுற வளர்ச்சிக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஆன்–லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இலவச தொலைபேசி எண் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார். இந்த ஆய்வின் போது கவர்னர் மாளிகை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை மதிக்க வேண்டும். கட்டாய ஹெல்மெட் அணிய ஏற்கனவே கால அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது. இனிமேல் கால அவகாசம் கொடுக்க முடியாது. புதுச்சேரியில் கடந்த 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் விதிமுறைகளை மீறியதாக கிட்டத்தட்ட 30 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக புதுவையில் நடமாடும் நீதிமன்றம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. சட்ட விதிமுறைகளை பாதுகாக்க வேண்டியவர்களே அதனை எதிர்ப்பது ஏன்?

ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற வி‌ஷயத்தில் முதல்–அமைச்சரா? கவர்னரா? என்பது தேவையில்லை. பொதுமக்களின் பாதுகாப்பதை உறுதி செய்வது முக்கியம். கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். ஹெல்மெட் வாங்க பணமில்லை என்று கூறுபவர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கவும், தினமும் பெட்ரோல் நிரப்பவும் எப்படி பணம் வந்தது?

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்