குற்றாலம் விடுதியில் மாணவர் மர்மசாவு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தக்கோரி த.ம.மு.க. ஆர்ப்பாட்டம்

குற்றாலம் விடுதியில் மாணவர் மர்ம சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு த.ம.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-02-13 22:00 GMT
நெல்லை, 

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ சோழன் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் உள்பட பலர் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர்.

அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் குற்றாலம் விடுதியில் இறந்த கார்த்திக் ராஜாவின் தந்தை ராஜ்குமார், தாயார் சரசுவதி ஆகியோரும் கலந்து கொண்டனர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள குட்டகம் புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 17). இவர், அங்குள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அவர்கள் 2 பேரும் திருமணம் செய்யும் நோக்கத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தனர். குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். கடந்த 3-ந் தேதி இரவு கார்த்திக்ராஜா விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்தார். அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்த வேண்டும். கார்த்திக் ராஜா சாவில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்