உயிரியல் துறை கண்டுபிடிப்புகள் ஆரோக்கிய மேம்பாட்டுக்கு துணைபுரியும் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

உயிரியல் துறைகளின் கண்டுபிடிப்புகள், மருத்துவம் மற்றும் மனித வாழ்க்கையின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு துணை புரிவதாக அமைகிறது என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பேசினார்.

Update: 2019-02-13 22:16 GMT

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறை சார்பில் கணிணி சார் மருந்து கண்டறிதலில் நவீன உத்திகள் மற்றும் வளர்ச்சிகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான 4 நாள் கருத்தரங்கு மற்றும் செயல்முறை பயிற்சியின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ்குமார் சிங் வரவேற்றார். விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

அழகப்பா பல்கலைக்கழகம் உலக அளவில் வியத்தகு வளர்ச்சியையும், அங்கீகாரத்தையும் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அழகப்பா பல்கலைக்கழகம் உலக தர வரிசையில் இடம் பெற்றுள்ள மிக சிறந்த பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு பல்வேறு உயர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இப்பல்கலைக்கழகம் தேசிய அளவில் பல்வேறு அங்கீகாரங்கள் மற்றும் தர வரிசைகளை பெற்றதற்கு உயிரி தகவலியல் துறையின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாகும்.

உயிரியல் துறைகளின் கண்டுபிடிப்புகள், மருத்துவம் மற்றும் மனித வாழ்க்கையின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு பெரிதும் துணைபுரிவதாக அமைகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பேராசிரியர் டி.பி.சிங், கொல்கத்தா போஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் பினக்பானி, இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், புதுடெல்லி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டெல்லி பேராசிரியர் ராகவ், சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் உதவி பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்