இளையான்குடி அருகே ஜல்லிக்கட்டு: காளைகளை விடுவதில் 2 கிராம மக்கள் மோதல்– போலீஸ் தடியடி 20 பேர் கைது

இளையான்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது காளைகளை விடுவதில் 2 கிராமமக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-02-13 22:30 GMT
இளையான்குடி,

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ளது அளவிடங்கான் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள புனித ஆரோக்கிய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அந்த கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை விடுவது தொடர்பாக ஏற்கனவே அளவிடங்கான் மற்றும் அருகே உள்ள நல்லூர் கிராம மக்களிடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு பின்னர் அதுவே கலவரமாக மாறியது.

இதையடுத்து இரு கிராம மக்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இந்த கலவரத்தில் அளவிடங்கான் கிராமத்தைச் சேர்ந்த பாரதிசங்கர் (வயது 30), சாலைக்கிராமத்தைச் சேர்ந்த குகன்குமார்(25), ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து அங்கிருந்த கிராம மக்கள் போலீசாரின் வாகன கண்ணாடியை அடித்து உடைத்தனர்.

இது குறித்து அளவிடங்கான் கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி மற்றும் பாரதி சங்கர் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் கலவரத்தில் ஈடுபட்டதாக அளவிடங்கான் மற்றும் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் மீது சாலைக்கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களில் 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்