குடும்ப அட்டையை திரும்ப ஒப்படைக்க திரண்ட பெண்கள்

அருப்புக்கோட்டை அருகே குடும்ப அட்டையை திரும்ப ஒப்படைக்க தாசில்தார் அலுவலகத்துக்கு பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-13 22:31 GMT
அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் நாடார் மக்கள் பேரவை தலைவர் கராத்தே ராஜா தலைமையில் தாசில்தார் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

 பெண்கள் அனைவரும் கைகளில் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை வைத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த பின்னர் தாசில்தார் சந்திரசேகர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கஞ்சநாயக்கன்பட்டியில் உறவின்முறைக்கு சொந்தமான கிணறு, ஊருணி, மடம், நந்தவனம் போன்றவற்றை அரசு கையகப்படுத்தி உள்ளது. அதனை எந்த ஆவணத்தின்படி அரசு கையகப்படுத்தியது என்று விளக்கம் கேட்டும், அதனை உறவின் முறைக்கு திருப்பி தரக்கோரி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கலெக்டரிடம் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை திருப்பி கொடுக்கும் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் செய்ய முடிவு செய்திருந்தோம். ஆனால் தாசில்தார் அழைப்பு விடுத்ததால் அங்கு திரண்டு வந்ததாக தெரிவித்தனர். பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் மாலை வந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தாசில்தார்கூறிச் சென்றார். தாசில்தாரின் விசாரணையால் முன்னேற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்று கூறி அனைவரும் கலைந்து சென்றனர்.

 மேலும் கிராம பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக கூறினர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்