இடைத்தேர்தல் நடத்துவதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது: எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் அவரது கட்சியை சேர்ந்தவரையே நியமிக்கலாமே? மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

‘‘இடைத்தேர்தல் நடத்துவதால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது, எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் அவரது கட்சியை சார்ந்தவரையே எம்.எல்.ஏ.வாக நியமிக்கலாமே?’’ என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Update: 2019-02-13 22:42 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் மதிப்பனூரை சேர்ந்த தாமோதரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–

முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி மரணம் அடைந்ததால், திருவாரூர் தொகுதி காலியானது. இந்த தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் 31–ந் தேதி வெளியிட்டது. சில நாட்களில் திடீரென திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதுபோன்ற நடவடிக்கைகளை செய்யாமல் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்காக, தேர்தல் ரத்து நடவடிக்கையை தலைமை தேர்தல் ஆணையர் மேற்கொண்டுள்ளார். இது சட்டவிரோதம். எனவே, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் பிறப்பித்த அறிவிப்பு செல்லாது என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘ஒரு தொகுதி எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால், அங்கு இடைத்தேர்தல் நடத்துவதால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது. சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க, இடைத்தேர்தல் நடத்துவதற்கு பதிலாக, மரணம் அடைந்தவர் சார்ந்த கட்சி சார்பில் மற்றொருவரை தேர்வு செய்து, அவரை அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக நியமனம் செய்யலாமே?

இதுபோன்ற நடவடிக்கைகளால் பல்வேறு பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படும். இது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கு பொருத்தமானதாக இருக்காது’’ என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கில் எதிர்தரப்பு வக்கீல் ஆஜராகாததால், விசாரணையை வருகிற 18–ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்