வீடுகளை அகற்ற மிரட்டல் விடுப்பதாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வீடுகளை அகற்ற மிரட்டல் விடுப்பதாக பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-02-14 22:30 GMT
பொன்னேரி, 

பொன்னேரி தாலுகா விச்சூர் ஊராட்சியில் அடங்கியது செம்பியம்மணலி கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் பொன்னேரி தாலுகா விச்சூர் ஊராட்சியில் அடங்கிய செம்பியம்மணலி கிராமத்தில் வசித்து வருகிறோம். கடந்த 2005-ம் ஆண்டு ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்து வீடுகள் கட்டி 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம்.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவர் போலி ஆவணம் மூலம் இந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றார். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தோம்.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த நபர்கள் எங்கள் குடியிருப்பு பகுதியை அளவீடு செய்கின்றனர். நாங்கள் கட்டிய வீடுகளை அகற்ற வேண்டுமென மிரட்டுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பாக ஆர்.டி.ஓ. நந்தகுமாரிடம் புகார் மனு அளித்தனர். அப்போது ஆர்.டி.ஓ. சம்பந்தப்பட்ட இடத்தில் நில அளவீடு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார்.

இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்