புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி: காதலர் தினத்தில் மனைவி சிலைக்கு மாலை அணிவித்து கணவர் மரியாதை

புதுக்கோட்டையில் காதலர் தினத்தில் மனைவி சிலைக்கு மாலை அணிவித்து முதியவர் மரியாதை செய்தது அப்பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

Update: 2019-02-14 23:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை உசிலங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 83). பி.எஸ்.என்.எல்.லில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி செண்பகவல்லி. சுப்பையா தனது உறவினரான செண்பகவல்லியை காதலித்து கடந்த 1958-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதியினருக்கு 8 பிள்ளைகள். இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு செண்பகவல்லி உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.

தனது காதல் மனைவி இறந்ததில் இருந்தே மனமுடைந்து காணப்பட்ட சுப்பையா மனைவிக்கு சிலை வைத்து மரியாதை செய்ய நினைத்தார். இதையடுத்து தனது மனைவி செண்பகவல்லிக்கு 3½ அடியில் வெண்கல சிலை செய்து, அதை தனது வீட்டின் முன்பு வைத்து, தினமும் வழிபாடு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு சுப்பையா, தனது காதல் மனைவி செண்பகவல்லியின் சிலையை சுத்தம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பூ வைத்து, தீபாராதனை காட்டி வழிபட்டார். இன்றைய சூழ்நிலையில் காதலிக்கும்போதே பிரிவதும், காதல் திருமணம் செய்தும் சில நாட்களில் பிரிவதும் சகஜமாகி வருகிறது. ஆனால் 13 ஆண்டுகளுக்கு முன் இறந்த காதல் மனைவியின் நினைவாக சிலை வைத்து அதற்கு மரியாதை செலுத்தி வரும் சுப்பையாவை அந்த பகுதியில் உள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சுப்பையா கூறுகையில், உறவினரான செண்பகவல்லியை காதலித்து திருமணம் செய்தேன். திருமணத்திற்கு பிறகு என்னை பரிவாகவும், பாசமாகவும் எந்த ஒரு சண்டை சச்சரவும் இன்றியும் பார்த்துக் கொண்டார். எனது மனைவி நான் கொடுக்கும் வருவாயில் வீட்டு செலவுபோக மீதி பணத்தில் வீட்டில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை வளர்த்து, சிறுக சிறுக சேமித்து வீடு, நிலம் போன்றவை வாங்க உறுதுணையாக இருந்தார். 48 ஆண்டுகால எங்களது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றது.

இந்நிலையில் எனது வாழ்க்கையில் பேரிடியாக 2006-ம் ஆண்டு சிறுநீரக கோளாறு காரணமாக செண்பகவல்லி உயிரிழந்தார். அவர் இழப்பை தாங்க முடியாமல் மிகுந்த துயரத்தில் இருந்த நான், ராமாயணத்தில் ராமன், சீதைக்கு சிலை அமைத்து வழிபட்டு வந்ததை படித்தேன். இதையடுத்து எனது மனைவிக்கும் அதுபோல சிலை அமைக்க முடிவு செய்து, எனது வீட்டிலேயே சிலை அமைத்து தினமும் வழிபாடு நடத்தி வருகிறேன். இதன் மூலம் இந்த சிலை உள்ளது, என் மனைவியே என்னோடு உள்ளது போன்று உணர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்