வேலை உறுதியளிப்புத் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் மறியல் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களை அமைதிப்படுத்தினர்.

Update: 2019-02-14 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள சத்திரமனை கிராமத்தில் மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், வாய்க்கால் தூர்வாருதல், நீர்நிலைகள் ஆழப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆதிதிராவிடர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து அப்பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு பிரிவினர், அங்கு பணிசெய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணி செய்ய மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிடர் இன மக்கள் பணி செய்ய மறுத்த, மற்றொரு தரப்பினரை கண்டித்தும், அவர்களை நூறுநாள் வேலை திட்டப்பணியில் இருந்து நீக்கிவிட்டு, அந்த பணியை தங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் பெரம்பலூர்- செட்டிக்குளம் சாலை சத்திரமனையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் மறியல் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களை அமைதிப்படுத்தினர். இதனால் பெரம்பலூர்- செட்டிக்குளம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்