மணப்பாறையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் மறியல்

மணப்பாறையில், தட்டுப்பாடின்றி குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-14 22:30 GMT
மணப்பாறை,

மணப்பாறை அரசு மருத்துவமனை அருகே உள்ள பாரதியார் நகர், பூசாரி பண்ணை, வடக்கிப்பட்டி, வடக்கு பாரதியார் நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு கடந்த 6 மாதங்களாக போதிய அளவு குடிநீர் வழங்கப்படுவதில்லை என கூறப்படு கிறது. வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் காவிரி குடிநீர் முழு கொள்ளளவும் நிரப்பப்படுவதில்லை. போதிய மழை இல்லாததால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி நேற்று அரசு மருத்துவமனை முன்பு மணப்பாறை-புதுக்கோட்டை சாலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

உங்கள் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக மணப்பாறை-புதுக்கோட்டை சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்