முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடந்தது

முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ.க.வினர் நேற்று கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2019-02-14 22:30 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு எதிராக நேற்று 2-வது நாளாக கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர்கள் ரவிச்சந்திரன், தங்க விக்ரமன், மாநில செயலாளர்கள் நாகராஜ், சாந்தி உள்பட பலர் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு சென்றனர்.

அங்கு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தாவை சந்தித்து கோரிக்கை மனு அளித் தனர். அந்த மனுவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் போலீசாரின் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு சென்றனர். அங்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை. மாநிலத்தின் முதல்-அமைச்சர், மற்றும் அமைச்சர்களே சட்டத்தை மதிக்காமலும், காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமலும் போராட்டம் நடத்துகின்றனர். கட்சியினரும் ஆங்காங்கே போராட்டம் நடத்துகின்றனர். இதனால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறை அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். போராட்டம் நடத்தும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்