பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் விழா: எருதாட்டத்தில் தகராறு; வாலிபர் மீது தாக்குதல் 5 பேர் கைது

சேலத்தில் எருதாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் மீது தாக்குதல் நடைபெற்றது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-02-14 22:15 GMT
சேலம்,

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 12-ந் தேதி எருதாட்டம் நடைபெற்றது. இந்த விழாவை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து பார்த்தனர். இந்த விழாவில் கொடிபள்ளம் ஜவகர்மில் பின்புறம் ஆட்டுக்கார லைன் பகுதியை சேர்ந்த மெய்யரசன் (வயது 26) என்பவர் வாடகைக்கு அழைத்து வந்த மாடு பங்கேற்றது. இந்த மாட்டை எருதாட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது ஒருவர் கையால் அடித்துள்ளார்.

இதைப்பார்த்த மெய்யரசன் அந்த நபரிடம் ஏன்? இவ்வாறு செய்கிறாய் என கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் மெய்யரசன் ஜவகர் மில் பகுதியில் உள்ள மகேஸ்வரி என்பவர் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து அங்கு 10 பேர் கொண்ட கும்பல் வந்தது. இவர்கள் மெய்யரசனுடன் தகராறு செய்ய வந்ததால், அவர் அந்த பகுதியில் உள்ள மகேஸ்வரி வீட்டின் உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டார். இதைப்பார்த்த அந்த கும்பல் வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை உடைத்து அவரை வெளியே இழுத்து போட்டதாக கூறப்படுகிறது.

மேலும் மெய்யரசனை தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக மெய்யரசன் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (19), கர்ணன் (19), மணிகண்டன் (21), சாமிநாதபுரத்தை சேர்ந்த தியாகராஜன் (21), முனியப்பன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பரதன் (20) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் எதிர்தரப்பை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், மெய்யரசன், பூபதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்