மாணவிகளை கிண்டல் செய்ததை கண்டித்த பெண் போலீசை தாக்கிய கல்லூரி மாணவர் கைது

மாணவிகளை கிண்டல் செய்ததை கண்டித்த பெண் போலீசை தாக்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-02-15 22:30 GMT
கோவை,

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கலாசார விழா நடந்தது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

அப்போது அங்கு நின்ற ஒரு மாணவர், சில மாணவிகளை கிண்டல் செய்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை பெண் போலீஸ் அந்த மாணவரை கண்டித்து உள்ளார். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

இதனால் ஆவேசம் அடைந்த அந்த மாணவர், பெண் போலீசிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட அந்த பெண் போலீஸ், அந்த மாணவரை துரத்திச்சென்று மடக்கி பிடித்து, சக போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். இதில் அந்த மாணவர், கோவை கணபதி மாநகரை சேர்ந்த சேதுபதி (வயது 22) என்பதும், அந்த கல்லூரியில் எம்.எஸ்சி ஐ.டி. படித்து வருவதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சேதுபதி மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்