கயத்தாறு அருகே பட்டப்பகலில் துணிகரம் விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

கயத்தாறு அருகே பட்டப்பகலில் வீட்டில் 7 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-02-15 22:00 GMT
கயத்தாறு, 

கயத்தாறு அருகே பட்டப்பகலில் வீட்டில் 7 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விவசாயி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அகிலாண்டபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் தன்னுடைய மனைவியுடன் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு புறப்பட்டு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் பெருமாளின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

போலீசார் விசாரணை

மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த பெருமாள் தனது வீட்டின் முன்பக்க கதவு, பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகைகள் திருட்டு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்