ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் நளினி, முருகன் தொடர் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான நளினி, முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

Update: 2019-02-15 22:00 GMT
வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலைக்காக போராடி வருகின்றனர். இதுவரை விடுதலை கிடைக்காததால் முருகன் கடந்த 7-ந் தேதி முதல் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில் கணவருக்கு ஆதரவாக நளினியும் கடந்த 9-ந் தேதி முதல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

சிறை விதிகளை அவர்கள் மீறியதால், பார்வையாளர்களை சந்திப்பது உள்பட சிறை சலுகைகள் அவர்களுக்கு ரத்து செய்யப்பட்டது. தொடர் உண்ணாவிரதம் அவர்களை சோர்வடையச் செய்தது. டாக்டர்கள், ஜெயில் அதிகாரிகள் தொடர்ந்து அவர்களை கண்காணித்து வந்தனர். அவ்வப்போது ஜெயில் அதிகாரிகளும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நளினியை சந்திக்க அவரது தாயார் பத்மா வேலூர் சிறைக்கு வந்தார். நளினி, முருகனுக்கு சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால் நளினியை அவர் சந்திக்க முடியவில்லை. அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

இதையடுத்து நேற்று மாலை சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, முருகன் மற்றும் நளினியிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார். சிறைக்குள் உள்ள கோவில் பூட்டை சோதனை என்ற பெயரில் காவலர்கள் உடைக்கக்கூடாது என்ற முருகனின் கோரிக்கையையும், பரோல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நளினியின் கோரிக்கையையும் ஏற்கப்பட்டதாக தெரிகிறது.

அதன்பின் முருகன் உண்ணாவிரதத்தை இளநீர் அருந்தி கைவிட்டார். அதைத்தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை குறித்தும், உண்ணாவிரதத்தை இருவரும் கைவிட்டதாக தெரிவிக்கப்பட்ட அதிகாரபூர்வமான தகவல் பெற ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள் மற்றும் டி.ஐ.ஜி. ஜெயபாரதியை தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை.

நளினியின் வக்கீலை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், ‘முருகன், நளினி உண்ணாவிரதத்தை கைவிட்டதாக வரும் தகவல் உண்மையா? என்று தெரியவில்லை. நாளை (இன்று) அவர்களை ஜெயிலுக்கு சென்று சந்திக்க உள்ளேன். அதன்பின்னரே இதுகுறித்து தெரியவரும்’ என்றார்.

மேலும் செய்திகள்