பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் வீண்போகாது மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேட்டி

பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் வீண்போகாது என மதுரையில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Update: 2019-02-15 23:30 GMT

மதுரை,

மதுரையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் மதுரை வந்தார். காலை 10 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 40–க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தியாகம் வீண் போகாது. இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. ராணுவ வீரர்கள் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. குறிப்பாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பிரதமரின் ஸ்வச் பாரத் தூய்மை இந்தியா திட்டத்தில் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் 52 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இதுபோல், முத்ரா கடன் திட்டத்தின் மூலம் சிறிய அளவிலான தொழில்முனைவோர் பலன் அடைந்துள்ளனர். மோடி அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு முழுமையாக உதவி செய்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும். தமிழகத்தில் விரைவில் கூட்டணியை முடிவு செய்வோம். இந்த கூட்டணி வலுவாக அமையும். தமிழகத்தில் அமைய உள்ள கூட்டணி மூலம் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணியை எதிர்கொள்வோம். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். பா.ஜ.க. தனியாக 300 இடங்களையும், கூட்டணியுடன் சேர்ந்து 350 இடங்களிலும் வெற்றி பெறும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு தலைவர் யார் என்பது தெரியவில்லை. வளர்ச்சி திட்டம் குறித்த எந்த எண்ணமும் அவர்களுக்கு இல்லை. மோடியை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைதொடர்ந்து ரவிசங்கர் பிரசாத் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

மதுரை ஒத்தக்கடை ராஜகம்பீரம் பகுதியில் பா.ஜ.க. சார்பில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமை தாங்கினார். இதில், மாநில செயலாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர் சசிராமன், புறநகர் மருத்துவர் அணி தலைவர் விஜயபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்