புதுவை கவர்னர் மாளிகை முன் நாராயணசாமி– அமைச்சர்கள் போராட்டம் 3–வது நாளாக நீடிப்பு துணை ராணுவத்தினரின் கெடுபிடியால் பரபரப்பு

புதுவை கவர்னர் மாளிகை முன் முதல்–அமைச்சர் நாராயணசாமி, மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் போராட்டம் 3–வது நாளாக நீடித்தது. முக்கிய பிரமுகர்களை போராட்ட களத்துக்குள் துணை ராணுவத்தினர் அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-15 23:28 GMT

புதுச்சேரி,

கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் புதுவை கவர்னர் மாளிகை முன்பு கடந்த 13–ந்தேதி பிற்பகல் 1.30க்கு தர்ணா போராட்டத்தை தொடங்கினார்கள். இதையொட்டி அங்கு கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

மேலும் அன்றைய தினம் இரவு தனது தனிச்செயலாளர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள கவர்னர் கிரண்பெடி திட்டமிட்டு இருந்தார். ஆனால் அங்கிருந்து அவர் வெளியேறி விடாதபடி அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் கவர்னர் மாளிகையின் பின்புறம் ஒரு அணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் கவர்னர் கிரண்பெடி கேட்டுக் கொண்டதன்பேரில் மத்திய அரசு துணை ராணுவத்தினரை புதுச்சேரிக்கு அனுப்பியது. இதன்பின் நேற்று முன்தினம் காலை 7.40 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து காரில் வெளியேறி கவர்னர் கிரண்பெடி சென்னை சென்றார். அங்கிருந்து அவர் டெல்லி சென்றார்.

கவர்னர் மாளிகை பகுதி முழுவதும் தற்போது துணை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் தர்ணா போராட்டம் நேற்று 3–வது நாளாக நீடித்தது. கடந்த 2 நாட்களிலும் இரவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகை முன் நடுரோட்டில் படுத்து தூங்கினார்கள்.

நேற்று காலை போராட்டக்களத்தில் இருந்து அமைச்சர் கந்தசாமி வெளியே செல்ல முயன்றார். அப்போது அவர் அமைச்சர் என்பது தெரியாமல், துணை ராணுவத்தினர் அவரை வெளியே செல்ல அனுமதி மறுத்தனர். நீண்ட வாக்குவாதத்திற்கு பின்பு உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் துணை ராணுவத்தினரிடம் எடுத்துக்கூறி அவர் வெளியே செல்ல அனுமதித்தனர்.

காலையில் வெளியே சென்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மீண்டும் போராட்ட களத்துக்கு வந்தபோது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கவர்னர் மாளிகை முன்பு செல்ல துணை ராணுவத்தினர் அனுமதித்தனர். மற்றவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம், கமலக்கண்ணன், சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட வாக்குவாதத்திற்கு பின்பு ஒரு சில முக்கிய நிர்வாகிகளை மட்டும் உள்ளே செல்ல துணை ராணுவத்தினர் அனுமதித்தனர். முதல்–அமைச்சரின் மகள் விஜயகுமாரியுடன் வந்த மகளிர் காங்கிரசாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை ஆட்சேபித்து அப்போது அந்த வழியாக வந்த சிவா எம்.எல்.ஏ. திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

நேற்று முன்தினம் வரை கவர்னர் மாளிகை பகுதியில் மட்டும் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினர் நேற்று தங்களது பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்தினர். அதாவது தலைமை தபால் நிலையம், சட்டசபையில் இருந்து வெளியே செல்லும் வாயில் வரை தடுப்புகளை அமைத்து இருந்தனர்.

இதுபோன்ற கெடுபிடியால் போராட்டம் நடத்த வந்த அரசியல் கட்சியினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பாகவே இருந்தது. ஆவேசமாக குரல் எழுப்பியபடி கவர்னர் மாளிகையை சுற்றி வந்த தொண்டர்களை முதல்–அமைச்சர் நாராயணசாமி அவ்வப்போது சந்தித்து அமைதியாக காந்திய வழியில் போராட்டம் நடத்துமாறு அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்