திருவாரூர் அருகே, போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து கைதியை மீட்டு சென்ற 10 பேர் கைது

திருவாரூர் அருகே போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து கைதியை மீட்டு சென்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-15 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் வைப்பூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழையவலம் கிராமத்தை சேர்ந்த ராஜா(வயது 43) அந்த பகுதியில் மது விற்றுக்கொண்டு இருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வைத்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராஜாவின் நண்பர்கள் 13 பேர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் அதிரடியாக போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து பணியில் இருந்த போலீசாரை மிரட்டி விட்டு ராஜாவை அங்கிருந்து மீட்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்படி, திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக நிவாஸ், மகேஷ், ரவி, ராஜா உள்பட 10 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களில் ராஜா ஏற்கனவே கைதாகி நண்பர்களால் மீட்டு சென்றவர் ஆவார். கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் இந்த சம்பவத்திற்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய் தனர்.

போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து கைதியை மீட்டுச்சென்ற 10 பேர் கொண்ட கும்பல் கைதான சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்