ஜனநாயக வழியில் செயல்பட கிரண்பெடிக்கு அறிவுறுத்துங்கள் மத்திய உள்துறை மந்திரிக்கு, நாராயணசாமி கடிதம்

கவர்னர் கிரண்பெடி ஜனநாயக வழியில் செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு, நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2019-02-16 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

புதுவை கவர்னர் கிரண்பெடி தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். அவரது விதிமுறை மீறல்களை சுட்டிக்காட்டி அவருக்கு நான் பலமுறை கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனர் அவர் அதை கண்டுகொள்ளாமல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மீனவர் மற்றும் அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை முற்றிலுமாக அவர் முடக்கிவிட்டார். அவரது செயல்பாடுகள் ஜனநாயகத்துக்கு ஊறுவிளைத்துள்ளது.

பழமைவாய்ந்த மில்களான ரோடியர், பாரதி, சுதேசி மில்களை அமைச்சரவையின் ஆலோசனையின்றி மூடவும் உத்தரவிட்டுள்ளார். அவசர தேவைக்காக பயன்படுத்தப்பட வேண்டிய 52–வது சட்டப்பிரிவினை அவர் ஏதேச்சதிகரமாக பயன்படுத்துகிறார். அரசு சார்பு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ, கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தை வழங்க மறுத்து ஊழியர்களுக்கான சம்பளத்தை முடக்கி வைத்துள்ளார். இதற்கான மானியம் உள்துறையின் ஒப்புதலுடன் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இலவச அரிசி திட்டம், தொழிற்கல்வி படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதையும் நிறுத்தி வைத்துள்ளார். ஜனநாயக விதிகளுக்கு எதிரான அவரது பிடிவாதமான அணுகுமுறைகள் மக்களை பாதிப்படைய செய்துள்ளன. அதனால் ஒட்டுமொத்த அமைச்சரவையும், எம்.எல்.ஏ.க்களுக்கு கடந்த 13–ந்தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு அமைதியான முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

நாங்கள் அகிம்சை வழியில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அவர் அதை மதிக்காமல் அவரது சர்வாதிகார பாணியில் துணை ராணுவப்பாதுகாப்புடன் கடந்த 14–ந்தேதி புதுவையிலிருந்து புறப்பட்டு சென்றார்.

தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றுள்ளார். அவர் 20–ந்தேதி புதுச்சேரி திரும்புகிறார். 21–ந்தேதிதான் சந்திக்க நேரம் கொடுத்துள்ளார். அவரது செயல்பாடுகள் ரோம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல் உள்ளது.

எங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை அமைதியான போராட்டம் கவர்னர் மாளிகை முன்பு தொடரும். தாங்கள் இதுதொடர்பாக ஜனாதிபதியுடன் பேசி, ஜனநாயக வழியில் கவர்னர் கிரண்பெடி செயல்பட அறிவுரை வழங்கவேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்