நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகமாக உருவாக வேண்டும்

நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகமாக உருவாக வேண்டும் என்று தேனி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்தி பேசினார்.

Update: 2019-02-17 22:45 GMT
தேனி,

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட தேனி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. விழாவில் நேற்று தொடக்கப்பள்ளி வளாகத்தில் காமராஜர் கல்வி வளாகம், காமராஜர் கலையரங்கம் ஆகிய புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் நூற்றாண்டு விழா மலர் வெளியீட்டு விழா நடந்தது. விழாவுக்கு உறவின்முறை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர். பின்னர் நடந்த விழாவில் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டனர். இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:-

என் வாழ்நாளில் பல பொறுப்புகளை, பல பதவிகளை பெற்று இருக்கிறேன். இந்த நூற்றாண்டு விழாவில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை என் வாழ்நாள் பெருமை என எண்ணுகிறேன். 100 ஆண்டுகள் கடந்து அரிய பல கல்வி சேவைகள் செய்துள்ளது தேனி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி. 100 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய மனதோடும், அரிய பல கனவுகளோடும் இந்த பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு படித்தவர்கள் டாக்டர்களாக, பொறியாளர்களாக, வக்கீல்களாக, ஆட்சி நிர்வாகங்களில் பணி புரிபவர்களாக, வரலாற்றை செதுக்கும் சிற்பிகளாக வளர்ந்து உள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

1919-ம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக தொடங்கி இன்றைக்கு உறவின்முறை கல்வி நிறுவனங்கள் ஆலமரம் போல் விழுதுகள் பரப்பி வளர்ந்து உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் இதை பின்பற்றி மேலோங்க வேண்டும்.

எனது மூத்த மகளும், 2 மகன்களும் இந்த நாடார் கல்வி நிறுவனத்தில் படித்தவர்கள் என பெருமை கொள்கிறேன். தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை வளர்ந்து உள்ளது. தேர்ச்சி விகிதமும் அதிகரித்து உள்ளது. வரும் காலங்களில் தேனி நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்கள் தலைசிறந்த பல்கலைக்கழகமாக உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை ஓ.பன்னீர்செல்வம் வழங்கி பாராட்டினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை காஞ்சனாதேவி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவில், தேனி எம்.பி. பார்த்திபன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், ஜெயலிதா பேரவை மாவட்ட செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார், நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி செயலாளர் விஜயகுமார் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், உறவின்முறை கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்