கும்பகோணத்தில் ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தல் போலீசார் விசாரணை

கும்பகோணத்தில் ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-02-17 22:15 GMT
திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். ஆனால் மாலை வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவருடைய தாய், மாணவியின் செல்போனுக்கு பல முறை தொடர்பு கொண்டார். ஆனால் அந்த மாணவி செல்போனை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இரவு 10.53 மணிக்கு மாணவியுடைய தாயின் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், “உங்களது மகளை கடத்தி வைத்துள்ளோம். ரூ.30 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவோம். இல்லையெனில் உங்கள் மகள் உடலை வீட்டுக்கு அனுப்பி வைப்போம்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து மாணவியின் தாய் பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தியவர்கள் யார்? மாணவி எங்கு இருக்கிறார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்