பொள்ளாச்சி தாலுகாவில், பிரதமரின் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற 4,500 பேர் விண்ணப்பம்

பொள்ளாச்சி தாலுகாவில் பிரதமரின் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற 4,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

Update: 2019-02-17 22:45 GMT
பொள்ளாச்சி, 

மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த தொகை நிதி ஆண்டின் ஒவ்வொரு 4 மாத இடைவெளியில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் தவணைகளில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி நிதி உதவி பெற கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் பயனாளிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதன்படி 2 ஏக்கர் பயிர் செய்யக்கூடிய நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் தகுதி உடையவர்கள் ஆவார்கள். இதில் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன்பெற முடியும். தரிசு நிலங்களுக்கு கிடைக்காது. வருமான வரி செலுத்துபவர்கள், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பென்சன் பெறுபவர்கள் தகுதியற்றவர்கள் ஆவர். இத்திட்டத்தில் முதல் தவணை மார்ச் 31-ந் தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மத்திய அரசின் திட்டமான விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை தாலுகாக்களில் அந்தந்த கிராம அலுவலர் அலுவலகத்தில் பயனாளிகள் கணக்கெடுப்பு மற்றும் உறுதிமொழி படிவங்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

விண்ணப்ப படிவத்துடன் கணினி சிட்டா, புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நில உரிமை பத்திரம் ஆகியவற்றின் நகல்கள் இணைக்க வேண்டும். கணக்கெடுக்கும் பணிகள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி தாலுகாவில் பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு, ராமபட்டிணம், நெகமம், கோலார்பட்டி ஆகிய பகுதிகளில் மட்டும் இதுவரை 4,500 சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முகாம் இன்று (திங்கட்கிழமை) வரை நடைபெறு கிறது.

மேலும் செய்திகள்