காஷ்மீரில் நடந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் எச்.ராஜா பேச்சு

காஷ்மீரில் நடந்த குண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பெரம்பலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

Update: 2019-02-17 23:15 GMT
பெரம்பலூர்,

காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகளின் குண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பெரம்பலூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம், கோட்ட இணைச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

பாகிஸ்தான், இந்தியாவுடன் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட முடியாத காரணத்தால் தீவிரவாதத்தை தூண்டிவிட்டு நம் நாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

 அமெரிக்காவில் இரட்டை கோபுரம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டபோது, அந்நாட்டின் உளவுத்துறை, ராணுவம் தோல்வியடைந்ததாக யாரும் தவறாக பேசவில்லை. ஆனால், நம் நாட்டில் ராணுவத்தின் செயல்பாடு குறித்து எதிர்மறை விமர்சனம் செய்கின்றனர். இந்த சம்பவத்தை ஒரு அரசியல் விவாதமாக மாற்ற நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை தேசிய பிரச்சனையாக அணுக வேண்டும்.


நாம் அனைவரும் ராணுவத்தின் பக்கம், அரசாங்கத்தின் பக்கம் துணை நிற வேண்டும். ராணுவத்துக்கு அரசாங்கம் முழு சுதந்திரம் வழங்கியுள்ளது. ராணுவத்துக்கு எதிராக யார் பேசினாலும் சகித்து கொள்ள முடியாது. இந்த பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம். மக்களுக்கு இந்த செய்தியை எடுத்துச் சொல்லவே இந்த ஆர்ப்பாட்டம். இந்த நாட்டை பலவீனப்படுத்தும் முயற்சியில் சில தீய சக்திகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு அரசு தக்க பதிலடி கொடுக்கும்.

இவ்வாறு எச்.ராஜா பேசினார்.

அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர் பாகிஸ்தான் நாட்டு பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து, அந்த நாட்டுக்கு எதிராக பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவ பொம்மை மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

மேலும் செய்திகள்