காவிரி குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

காவிரி குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-17 22:45 GMT
கீரனூர்,

கீரனூர் பஸ் நிலையம் அருகே உள்ளது புஷ்பா நகர். இங்கு வசிக்கும் மக்களுக்கு கடந்த 10 நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் வெகு தொலைவில் இருந்து குடிநீர் எடுத்து வந்தனர். இதுகுறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டபோது, அடுத்துடுத்த தெருவுக்கு செல்லும் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் அதனை சரிசெய்வதற்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்படுவதாக கூறுகின்றனர்.

இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அந்த பகுதி வழியாக செல்வதை அறிந்த புஷ்பாநகர் பொதுமக்கள் அவர் வரும் சாலையில் கற்களை போட்டும், குடங்களை வரிசையாக வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர், கீரனூர் அ.தி.மு.க. நகர செயலாளர் ரவிச்சந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். இதற்கிடையே கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே அமைச்சர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு சேதமடைந்த குழாய்களை உடனடியாக மாற்றி அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர் மாற்று பாதையில் புதுக்கோட்டைக்கு திரும்பினார். இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்