குளித்தலை அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்; பெண் பலி 14 பேர் காயம்

குளித்தலை அருகே லாரி மீது அரசு பஸ் மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

Update: 2019-02-17 23:00 GMT
குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை பகுதியில் சாலையோரம் மரம் ஏற்றி வந்த லாரி ஒன்று நேற்று அதிகாலை நின்று கொண்டிருந்தது. அப்போது கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் கரூர் அருகே உள்ள மணவாசி பகுதியை சேர்ந்த மகாலெட்சுமி (வயது 29) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் பஸ் டிரைவர் ஜான்பொன்னையன் (52), கண்டக்டர் நாகராஜ் (34), பயணிகள் உலகநாயகி (27), கவுசிக் (6), அங்கமுத்து (70), மணிவண்ணன் (49), தனலெட்சுமி (55), ரேவதி (23), கோகிலா (30), நிர்மலா (40), கவிதா (40), மணிகண்டன் (35), நாகரெத்தினம் (40), கருப்பையா (54) ஆகிய 14 பேர் காயமடைந்தனர்.அவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்