ரூ.6 ஆயிரம் நிதி: விவசாயிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்

ரூ.6 ஆயிரம் நிதி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2019-02-17 22:45 GMT

விருதுநகர்,

கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:–

விவசாயிகளின் பொருளாதார தேவையை ஈடுசெய்து அவர்களின் வருமான ஆதாரத்தை பெருக்கும் வகையில் 2 எக்டேர் பரப்பிற்கும் குறைவான விவசாய நிலம் கொண்டுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஒவ்வொரு 4 மாதத்திற்கொருமுறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கும் வகையில் பிரதம மந்திரி விவசாயிகள் வருமான ஆதரவு திட்டம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து அதனை செயல்படுத்தவும் வழிவகை செய்துள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இந்த தொகை நேரடியாக மத்திய அரசின் மூலம் செலுத்தப்படும். இதில் முதல் தவணைத் தொகை ரூ.2ஆயிரம் இந்த மாதத்திற்குள் செலுத்தப்படும்.

நிறுவனங்கள், அரசியல் சாசனப் பதவிகள் வகித்தவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் (கடைநிலை ஊழியர்கள் தவிர்த்து), மாதம் ரூ.10ஆயிரத்துக்கும் அதிகமாக ஓய்வூதியம் பெறும் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள் (கடைநிலை ஊழியர்கள் தவிர்த்து), கடந்த ஆண்டு வருமான வரி கட்டியவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், அக்கவுண்டன்ட், கட்டிட வடிவமைப்பாளர்கள் போன்ற தொழில்முறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் ஆகியோர்கள் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற இயலாது.

2 எக்டேர் பரப்பிற்கும் குறைவான விவசாய நிலம் கொண்டுள்ள விவசாயக் குடும்பங்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்களால் கணக்கெடுப்பு செய்யப்பட்டு விவசாயிகளின் பட்டா எண்கள், வங்கிக் கணக்கு எண் விவரங்கள், ஆதார் எண், குடும்ப அட்டை எண், தொலைபேசி எண் போன்றவை தீவிரமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், விவசாயியின் தகுதி குறித்தும், ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு அவரது தகுதியை சரிபார்ப்பதற்கான அவரது இசைவினை பெறுவதற்காகவும் கணக்கெடுக்கப்பாளரால் ஒரு உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெறப்படுகிறது. இவ்வாறு கணக்கெடுக்கும் பணியாளர்கள் விவசாயிகளை அணுகும் போது, நில, வங்கி கணக்கு, ஆதார், குடும்ப அட்டை, தொலைபேசி விவரங்களை விரைந்து வழங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்