குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2019-02-18 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் இருந்து விலையில்லா வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 700 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து கூட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்த 7 பேருக்கு பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வரப்பெற்ற தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை இறந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு கலெக்டர் உமா மகேஸ்வரி வழங்கினார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பரவாக்கோட்டை ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் பரவாக்கோட்டை பகுதியில் 650 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இவர்கள் அனைவரும் தினக்கூலிக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர். அனைவரும் போதிய வருமானம் இன்றி உள்ளனர். இதனால் அனைவரையும் வறுமை கோட்டிற்கு கீழ் கொண்டு வர வேண்டும் என கூறியிருந்தனர்.

ஆவுடையார்கோவில் மாகசாமி நகர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் பல ஆண்டுகளாக மாகசாமி நகர் பகுதியில் குடியிருந்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. மேலும் எங்களுக்கு வேறு இடங்களும் கிடையாது. இதனால் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

புதுக்கோட்டை ஏ.எம்.ஏ. நகர் பிரிவு, பாமா நகர் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஏ.எம்.ஏ. நகர் பிரிவு, பாமா நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பல மாதங்களாக உள்ளது. நாங்கள் தினமும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வல்லத்திராகோட்டையில் இருந்து டேங்கர் லாரியில் கொண்டு வரப்படும் தண்ணீரை ரூ.5 முதல் ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடமும், நகராட்சி அதிகாரிகளிடமும் நாங்கள் மனுக்கள் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

திருமயம் தாலுகா பனங்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கியபோது எங்கள் கிராமமும் பெரும் சேதமடைந்தது. அப்போது இங்கு வந்த அதிகாரிகள் சேத விவரங்களை ஆய்வு செய்து சென்றனர். இதனால் நாங்களும் எங்களுக்கு அரசின் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை கிடைக்கும் என நம்பி இருந்தோம். ஆனால் இதுநாள் வரை எங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு அரசின் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். 

மேலும் செய்திகள்