குஜிலியம்பாறை அருகே பரபரப்பு, 2 கோவில்களின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

குஜிலியம்பாறை அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-02-18 23:00 GMT
குஜிலியம்பாறை, 

குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த காலனி அருகே மேட்டுபெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவு வேளையில் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.

பின்னர் கோவிலில் வைத்திருந்த 6 குத்து விளக்குகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். நேற்று காலை கோவிலை திறக்க வந்த பூசாரி கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு பணம், பொருட்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர்கள் வந்து பார்வையிட்டனர்.

இதேபோல் குஜிலியம்பாறை அருகே உல்லியக்கோட்டை கிராமத்தில் மாயவன் பெருமாள் கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த பித்தளைசெம்பு, 2 குத்துவிளக்குகள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் உண்டியலை உடைத்து பணத்தை அள்ளி சென்றனர்.

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து தனித்தனியாக குஜிலியம்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இந்த 2 கோவில்களிலும் ஒரே நபர்கள் தங்களது கைவரிசையை காட்டியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 2 கோவில்களின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற சம்பவம் குஜிலியம்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்