பெருந்துறை அருகே பரபரப்பு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி வாலிபர் கைது

பெருந்துறை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-18 22:00 GMT

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் நால் ரோடு அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்துக்குள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஏதோ ஒரு கோவிலில் இருந்து எடுத்த வேல் கம்பியுடன் ஒரு நபர் புகுந்தார். உடனே அந்த நபர் வேல் கம்பி மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்க முயன்றார்.

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் விழித்து எழுந்தனர். பின்னர் அவர்கள் ஏ.டி.எம். மையத்தை நோக்கி ஓடி வந்தனர்.

அப்போது ஏ.டி.எம். மையத்தை ஒருவர் உடைத்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்களை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து ஓட முயன்றார். உடனே பொதுமக்கள் அந்த நபரை பிடித்து காஞ்சிக்கோவில் போலீசில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அந்த நபர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மான்குட்டைபாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் அரவிந்த்சாமி (வயது 27) என்பதும், அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அரவிந்த்சாமியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்