ரூ.2 ஆயிரம் உதவித்தொகைக்கான பட்டியல் தயாரிப்பில் முறைகேடு கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்

அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான தகுதி உள்ளோரின் பட்டியல் தயாரிப்பில் முறைகேடு நடந்து இருப்பதால் அதனை மறு பரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-02-18 22:41 GMT

விருதுநகர்,

விருதுநகர் யூனியன் மீசலூர் கிராம மக்கள் கலெக்ட சிவஞானத்திடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

முதல்–அமைச்சர் அறிவித்துள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான ரூ.2ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான தகுதி உள்ளோர் பட்டியலில் வசதி படைத்தவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இது விதிமுறைக்கு புறம்பானது. இது குறித்து அதிகாரிகள் நியாயமாக உத்தரவிட்டு இருந்தாலும் பணியாளர்கள் அவர்கள் விருப்பப்படி ஒரு பட்டியலை தயாரித்து அதில் அதிகம் நிலம் உள்ளவர்கள் வசதி படைத்தவர்களின் பெயர்களை சேர்த்துள்ளனர். எனவே தாங்கள் தனியாக அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்தி தகுதி உள்ளவர்கள் யார்? யார்? என்பதை மறு பரிசீலனை செய்து அதன்படி நிதிஉதவி பெறுவதற்கான பட்டியலை தயாரிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

திருச்சுழி தாலுகாவில் உள்ள வரிசையூர் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் தங்கள் ஊரில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் நரிக்குடி யூனியனில் உள்ள நிலையில் அந்த பட்டியலை பஞ்சாயத்து செயலர் மற்றும் யூனியன் அதிகாரிகள் தர மறுப்பதாகவும், அந்த பட்டியலை தர உத்தரவிடக் கோரி மனு கொடுத்துள்ளனர். இதே போன்று மூளிபட்டி கிராமத்தை பொதுமக்களும் தங்கள் கிராமத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கே ரூ.2 ஆயிரம் நிதிஉதவி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு கொடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்