கோவில் திருவிழாவில் தகராறு, படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

ஆரணி அருகே கோவில் திருவிழாவில் நடந்த தகராறில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-02-19 22:45 GMT
ஆரணி,

ஆரணியை அடுத்த லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 28), கூலி தொழிலாளி. கடந்த 5-ந் தேதி இந்த பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இரவு சாமி திருவீதி உலா நடைபெற்றபோது தமிழ்செல்வனுக்கும், காலனி பகுதியை சேர்ந்த மணிவண்ணன், அவரது தம்பி மாதவன் மற்றும் சிலருக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.

அப்போது மணிவண்ணன், மாதவன் மற்றும் சிலர் தமிழ்செல்வனை கட்டையால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த தமிழ்செல்வன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்செல்வன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ஆரணி தாலுகா போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, தலைமறைவாக உள்ள மாதவன் உள்பட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்