பணிவிடை செய்தபோது தவறி விழுந்து அர்ச்சகர் சாவு: ஆஞ்சநேயர் கோவிலில் கைப்பிடி அமைக்கும் பணி தொடங்கியது

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பணிவிடை செய்தபோது அர்ச்சகர் தவறி விழுந்து இறந்ததை தொடர்ந்து, அங்கு கைப்பிடி அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

Update: 2019-02-19 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் கோட்டை சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). அர்ச்சகரான இவர் விடுமுறை நாட்களில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பணிவிடை செய்ய வருவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த மாதம் 27-ந் தேதி ஆஞ்சநேயருக்கு பணிவிடை செய்ய வந்தார். இங்கு 8 அடி உயரத்தில் பலகையில் நின்று கொண்டு ஆஞ்சநேயருக்கு மலர்மாலை அணிவித்து கொண்டு இருந்தபோது, அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்ய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக அர்ச்சகர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

எனவே இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அர்ச்சகர்கள் நின்று பணிவிடை செய்யும் பலகையின் அகலத்தை அதிகப்படுத்தவும், கைப்பிடி அமைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் ஆஞ்சநேயர் சிலையை சுற்றிலும் கைப்பிடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து கோவில் செயல் அலுவலர் ரமேஷ் கூறியதாவது:-

ஆஞ்சநேயர் சிலையை சுற்றிலும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவில் கைப்பிடி அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது. இதேபோல் அர்ச்சகர்கள் நின்று பணிவிடை செய்யும் பலகையின் அகலம் 1½ அடியாக இருந்தது. தற்போது அது 2 அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதிலும் கைப்பிடி வைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் இன்றைக்குள் (புதன்கிழமை) முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்