உளுந்தூர்பேட்டையில் 2 வீடுகளில் பொருட்கள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

உளுந்தூர்பேட்டையில் 2 வீடுகளில் பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-02-19 22:45 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் சூரியகுமார் (வயது 45). இவர் கிளாப்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று சூரியகுமார் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் குஜராத் சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி சூரியகுமாருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சூரியகுமார் குஜராத்தில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

இதற்கிடையே உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு, விசாரித்தனர். விசாரணையில் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த சில பொருட்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. ஆனால் வேறு ஏதேனும் பொருட்கள் திருடுபோனதா என்பது குறித்து சூரியகுமார் வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சூரியகுமாரின் வீட்டுக்கு அருகில் உள்ள ஓய்வுபெற்ற சிறைவார்டன் சுந்தரமூர்த்தி என்பவரது வீட்டிலும் பொருட்களை திருடிய மர்மநபர்கள், தனியார் வங்கி மேலாளர் வினோத்குமார்(40) என்பவர் வீட்டில் திருட முயற்சி செய்திருப்பதும் தெரியவந்தது.

சுந்தரமூர்த்தியும் வெளியூர் சென்றுள்ளதால், அவர் வந்த பிறகே திருடுபோன பொருட்கள் குறித்த முழுவிவரம் தெரியவரும். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்