மத்திய அரசின் நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் பட்டியல் கிராம நிர்வாக அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்

மத்திய அரசின் நிதி திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகளின் பட்டியல் கிராம நிர்வாக அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

Update: 2019-02-19 22:36 GMT

சிவகங்கை,

இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– பிரதம மந்திரி கிஸான் சம்மன் நிதி என்ற மத்திய அரசின் நிதி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் 5 ஏக்கர் மற்றும் அதற்குள் உள்ள நில உரிமையுள்ள விவசாயிகள் குறித்த பட்டியல் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

இதில் விடுபட்டவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வங்கிக்கணக்கு, ஆதார், ரே‌ஷன்கார்டு நகல்களை நேரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் நிறுவன உரிமையாளர்கள், அரசியல் சார்ந்த பதவி வகிப்பவர்கள், முன்னாள், இந்நாள் மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்.

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநகர மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள், ரூ.1000 மற்றும் அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறும் அலுவலர்கள்.

கடந்த ஆண்டு வருமான வரி செலுத்தியவர்கள், பதிவு பெற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள் போன்ற தொழில் சார்ந்த நபர்கள். பெரிய பட்டாதாரர்கள் (5 ஏக்கருக்கு மேல் நில உரிமை உள்ள நபர்கள்) இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

மேலும் செய்திகள்