வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? போலீஸ் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

மத வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து போலீஸ் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-02-19 23:07 GMT

மதுரை,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த துரைராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்துகின்றனர். இதனால் பள்ளி மாணவ–மாணவிகள், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்களும் அவதிப்படுகிறார்கள். கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விதிகளை மீறி, அந்த ஆலயத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்துகிறார்கள். இது ஒலி மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிரானது. எனவே அந்த ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் தமிழக போலீஸ் டி.ஜி.பி., உள்துறை செயலாளர் ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் “தமிழகத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்னென்ன? என்பது குறித்து டி.ஜி.பி., உள்துறை செயலாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 4–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்