சேலத்தில் கொலை செய்யப்பட்ட கோவில் பூசாரியிடம் கடைசியாக செல்போனில் பேசியவர்கள் யார்? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

சேலத்தில் கொலை செய்யப்பட்ட கோவில் பூசாரியிடம் யாரெல்லாம் கடைசியாக செல்போனில் பேசினார்கள் என அவரது செல்போனில் பதிவாகி இருந்த எண்களை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-02-20 22:30 GMT

சேலம்,

சேலம் சுக்கம்பட்டி, வலசையூர் காளியம்மன் கோவில் அருகே உள்ள சுந்தர்ராஜன் காலனி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 55). நெசவு தொழிலாளியான இவர் ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். மேலும் தனது வீட்டின் அருகே காளியம்மன் கோவில் கட்டி அதில் பூசாரியாக இருந்தார். இவருக்கு பத்மா (50) என்ற மனைவியும், பிரியா (29) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 17–ந் தேதி இரவு பாஸ்கர் வெளியில் சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் பாஸ்கர், நேற்று முன்தினம் காலை அவரது வீட்டின் அருகே உள்ள காட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து பத்மா வீராணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கொலையாளிகளை கண்டு பிடிக்க சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் பாஸ்கர் பிணமாக கிடந்த இடத்திற்கு சென்று அங்கு ஏதாவது தடயம் சிக்குகிறதா? என்று சோதனை நடத்தினர். பின்னர் அவர் பயன்படுத்திய செல்போனில் பதிவாகி இருந்த எண்களை வைத்து யாரெல்லாம் அவரிடம் கடைசியாக பேசினார்கள் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கொலையாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்