சுப்பிரமணியன் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்: காஷ்மீர் தாக்குதலுக்கு மத்திய அரசின் கவனக்குறைவே காரணம் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

காஷ்மீர் தாக்குதலுக்கு மத்திய அரசின் கவனக்குறைவே காரணம் என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.

Update: 2019-02-20 22:30 GMT
கயத்தாறு, 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் வீர மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் தி.மு.க. மாநில மகளிர் அணி தலைவி கனிமொழி எம்.பி. நேற்று மாலையில் சவலாப்பேரிக்கு சென்று, சுப்பிரமணியனின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் கூறினார். அங்குள்ள சுப்பிரமணியனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி எம்.பி. அதன் பின்னர், அவரது நினைவிடத்திலும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய நாட்டை காப்பதற்காக உயிர் தியாகம் செய்யும் வீர தியாகிகளை ஆண்டாண்டு காலமாக அனைவரும் போற்றும் வகையில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். மேலும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும். இதற்கு தி.மு.க. உறுதுணையாக இருக்கும்.

போர் நடைபெறாத சூழ்நிலையில் பல ராணுவ வீரர்களை நாம் இழந்து இருக்கிறோம். இது வருந்தத்தக்கது. காஷ்மீர் புலவாமா சம்பவம் நடந்ததற்கு மத்திய அரசின் கவனக்குறைவும், உளவுத்துறையின் செயல்பாடும் தான் காரணம். இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கண்டிப்பாக பதில் கூறியே தீர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் கீதாஜீவன் எம்.எல்.ஏ. (வடக்கு), அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. (தெற்கு) உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்