வேடசந்தூர் அருகே, குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-20 22:45 GMT
வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள மாதிநாயக்கன்பட்டியில் 75-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊருக்குள் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் குறைந்தது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றை கூடுதலாக ஆழப்படுத்தி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தனியார் தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ரவிக்குமார் தலைமையில் மாதிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் தட்டாரபட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அவர்களுடன் தட்டாரபட்டி ஊராட்சி மன்ற செயலர் ரவி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்