மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதாக கூறி பெண்களிடம் பணம் வசூலித்து மோசடி

நீலகிரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதாக கூறி பெண்களிடம் பணம் வசூலித்து சிலர் மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-02-20 22:45 GMT
ஊட்டி,

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் வகையில் கிசான் சம்மான் நிதி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி 5 ஏக்கருக்குள் நிலம் வைத்து உள்ள விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட உள்ளது. இதற்கிடையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மற்றும் மகளிர் குழுவினர் இணைந்து தகுதி உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின் றனர்.

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதாக கூறி மாதந்தோறும் ரூ.500 முதல் ரூ.1000 வரை வசூலித்து, பெண்களிடம் இருந்து சிலர் விண்ணப்பங்களை பெற்று வருவதாக தெரிகிறது. அப்போது அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக கடன் வழங்கப்படும் என்றும், அதன்பிறகு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதற்காக கிராமப்புற பெண்கள் ஆதார் அடையாள அட்டையுடன் கடன் வழங்குவதாக கூறப்படும் இடங்களில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஊட்டி சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா பகுதியில் ஏராளமான பெண்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் அளித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் பணம் வசூலித்து சிலர் மோசடி செய்து வருவதாக ஊட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஊட்டி, கேத்தி, எமரால்டு ஆகிய பகுதிகளில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, மகளிர்களுக்கு கடன் வழங்குவதாக கூறி யாரேனும் வந்தால் ஏமாற வேண்டாம். இதுபோன்ற விஷயத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மகளிர்களுக்கு கடன் வழங்குவதாக கூறி ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கூறும் போது, இதுசம்பந்தமாக உரிய விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளேன் என்றார். 

மேலும் செய்திகள்