2 வாலிபர்கள் கொலை சம்பவம்: செல்போனை பறித்து அவமானப்படுத்தியதால் குத்தி கொன்றேன் சரண் அடைந்த ஆட்டோ டிரைவர் வாக்குமூலம்

திருச்சியில் 2 வாலிபர்கள் கொலை சம்பவத்தில் சரண் அடைந்த ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் தனது செல்போனை பறித்து அவமானப்படுத்தியதால் குத்தி கொன்றேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

Update: 2019-02-20 23:15 GMT
மலைக்கோட்டை,

திருச்சி கீழ தேவதானம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள பெட்டிக்கடை முன்பு நின்று கொண்டு இருந்தார். அங்கு 4 பேர் குடிபோதையில் தகராறு செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவரான கீழஆண்டாள்வீதியை சேர்ந்த ஜெகநாதன் (37) தகராறை வேடிக்கை பார்த்ததோடு, செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்ட மணிகண்டன் இதுபற்றி அங்கு வந்த தனது மாமா கீழதேவதானத்தை சேர்ந்த பெயிண்டரான பிரகாஷ் (38) மற்றும் அவரது நண்பரும், தொழிலாளியுமான ராஜ்குமார் (30) ஆகியோரிடம் கூறினார்.

உடனே அவர்கள் இருவரும் ஜெகநாதனிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு, அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் செல்போனை கொடுத்து மிரட்டிவிட்டு சென்றனர். இதையடுத்து ஜெகநாதன் அங்குள்ள கடையில் மதுவாங்கி கொண்டு ஆத்திரத்துடன் வீட்டுக்கு சென்றார். அங்கு மது அருந்தியவுடன் அவருக்கு கோபம் தலைக்கேறியது. உடனே வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கொண்டு ஆட்டோவில் அதே இடத்துக்கு வந்தார்.

அப்போது பிரகாஷும், ராஜ்குமாரும் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே ஜெகநாதன் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார். கத்தி குத்து காயங்களுடன் கிடந்த இருவரையும் அந்த பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்தபோது இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே ஆட்டோ டிரைவர் ஜெகநாதன் கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெகநாதனை கைது செய்தனர்.

பின்னர் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “சம்பவத்தன்று இரவு நான் அந்த பகுதியில் சென்றபோது, சிலர் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அங்கு எனது செல்போனை எடுத்து பார்த்து கொண்டு இருந்தேன். ஆனால் நான் தகராறை வீடியோ எடுப்பதாக நினைத்து இருவரும் என்னை தாக்கி செல்போனை பறித்து கொண்டனர். மேலும், என்னை அவமானப்படுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டுக்கு சென்றேன். அங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் வாங்கிய கத்தி ஒன்றை வைத்து இருந்தேன். அந்த கத்தியை எடுத்து கொண்டு மீண்டும் அங்கு வந்தேன். அப்போது பிரகாஷும், ராஜ்குமாரும் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். உடனே கத்தியால் இருவரையும் சரமாரியாக குத்தி கொன்றேன்” என்று கூறி இருந்தார்.

இதையடுத்து கோட்டை போலீசார், கீழதேவதானம் பகுதியில் தகராறில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்